“கிளீன் ஐலண்ட்” திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் சுற்றுச்சூழல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் 16.10.2026 அன்று நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, இலங்கையில் முன்னெடுக்கப்படும் “கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) திட்டத்தின் ஓர் அங்கமான “கிளீன் ஐலண்ட்” (Clean Island) திட்டத்தை நெடுந்தீவில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு. நடராசா பிரபாகரன் அவர்கள், நெடுந்தீவுப் பிரதேசத்தின் தற்போதைய தேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடி கள விஜயம் மேற்கொண்டு, அப்பகுதிகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய இடங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர். இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, நெடுந்தீவின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் அமைச்சர் வழங்கினார். நெடுந்தீவைத் தூய்மையான, பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிரதேசமாக மாற்றுவதுடன், நிலையான அபிவிருத்தியை ஊக்குவித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
<

<
























